புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 19, 2020

பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்


ஒரு மருத்துவ மாணவரின் தற்கொலையிலிருந்து நீளும் இந்த நாவல் இச்சமூகத்தின் இடுக்களில் உள்ள அத்தனை நுழைவுகளிலும் உள் நுழைந்து பட்டவர்த்தனப் படுத்தியிருக்கிறது என்றே பார்க்கிறேன். குறிப்பாக மருத்துவத்துறையின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதும், அங்கு நிலவும் கீழ்மை மனங்கொண்ட மனிதர்கள் மீதும், மேன்மையானவர்கள் என்று நம்பப்படுவர்கள் மீதும் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளது. முன்னுரையில் அண்ணன் சரணன் சந்திரன் சொல்லியிருந்தது போன்று  மயிலன், அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதினால் படிநிலைகளைக் கடந்து எழுத முடிந்திருக்கிறது. அவரால் இன்னும் விலாவாரியாக எழுத முடியும், அதைத் தொட்டிருந்தால் இந்த நாவலின் மையச்சரடு வேறு திசையை நோக்கி நகர்ந்திருக்கும் இல்லையெனில் வேறொரு சிக்கலினுள் ஆட்பட்டிருக்கக் கூடும். அண்ணாச்சி மயிலனிடம் நான் எப்போதும் வியந்து பார்ப்பது என்னவெனில் அவரிடம் எழுத்துச் சிக்கனம் இருக்கும், எதை எந்த அளவிற்கு சொல்ல வேண்டும் என்கிற கவனமிருக்கும், அதைத் தாண்டி நீட்டி முழக்க மாட்டார். இதை இவர் எழுதத் துவங்கியதிலிருந்து இன்றுவரை காண்கிறேன். எப்படி ஒரு சிகிச்சைக்கு ஒழுங்குமுறை எவ்வளவு அவசியமோ, அந்த ஒழுங்கு நேர்த்தியை எழுத்திலும் கடைப்பிடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். (மருத்துவராக இருப்பதினால் இந்த லாவகம் அவருக்கு சுலபமாக கைக்கூடி வந்திருக்கும் என்பது என்னுடைய கணிப்பு)

மருத்துவம் பயின்று, நமது சமூகத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிகரமான மருத்துவர் என்று பெயரெடுப்பது இங்கு அவ்வளவு சுலபமல்ல... ஒரேயொரு சிகிச்சை தோல்வி போதும், அம்மருத்துவரின் முந்தைய வெற்றிகளனைத்தும் புறந்தள்ளப்பட்டு அம்மருத்துவரின் தகுதியின் மீது கபடி ஆடக்கூடிய ஆபத்தான சூழலில் இருக்கிறோம். ஒரு இருதய அறுவை சிகிச்சை அரங்கினுள் எவ்வளவு புரளிகளும், குரோதமும் பேசப்பட்டிருக்கின்றன என்கிற நேரடி அனுபவங்கள் எனக்கு உண்டு. சென்னையின் இரண்டு மிகப்பெரிய மருத்துவமனைகளில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன், அங்குள்ள அவநம்பிக்கைகள், ஒருவரது முன்னேற்றத்தின் மீது எறியப்படும் காழ்ப்புணர்வுகள், அணியாக வெளியே தெரிந்தாலும் அதற்குள் நிலவும் குழு/இன அரசியல், செவிலியர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள், ஊழியர்கள் அளந்துவிடும் பொய் மூட்டைகள்  இவைகளனைத்தையும் ஒரு நாவலில் பதிவு செய்ய முடியுமா என்றால், ஆம் அது தான் பிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம்.

ஒருவரது உணர்ச்சியின் வெளிப்பாட்டை வைத்துத் தான் நல்லவன்/கெட்டவன் என்கிற முகமூடியை தரித்துவிட முயல்கின்ற கூட்டத்திற்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதித் தமிழனிடம் இருந்து எவ்வளவோ விலகி வந்திருந்தாலும் இந்த புறம் பேசும் விசயத்தில் இன்னும் அவர்களோடு ஒன்றுபட்டு முன்பை விட தற்போது அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோமோ? என்கிற எண்ணத்தையும் இந்த நாவலில் பேசப்பட்டிருக்கிறது, அதையும் ஒரு சின்ன பத்தியில் நறுக்கென்று சொன்ன விதம் தான் மயிலனின் எழுத்துச் சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டு.

மானுட முன்னேற்றத்தின் அடிப்படை விதியான கல்வியில், அதுவும் உயிர்க் காக்கும் உயரிய படிப்பான மருத்துவப் படிப்பில் சேரும் ஒரு சராசரி மாணவனின் மனச்சிதைவையும், அதிலிருந்து தன்னை தற்காத்து, மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் போராட்ட குணத்தினையும், சக மாணவர்களே அருகில் நின்று எள்ளி நகையாடுகையில் நொறுங்கி விடாமலும், தலைமை மருத்துவர், பயிற்சி மருத்துவ மாணவர்களின் மீதுத் தொடுக்கும் மன ரீதியான தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும், நிராகரிப்புகளையும்  அதுவெழுப்பும் அகச்சிதைவுகளையும் எல்லாம் கடந்து எவ்வாறு ஒருவர் தேர்ச்சிப் பெற்று வருகிறார் என்பதினை  இந்தப்புத்தகத்தில் பதிவு செய்த அளவிற்கு தமிழில் வேறெந்தப் புத்தகத்திலும் நான் வாசித்ததே இல்லை. அதற்காகவே மயிலனுக்கு தனிக் கைக்குலுக்கல்கள்.

தானே எல்லோரையும் விட மேலானவன், தன் மீதுதான் ஒட்டுமொத்த வெளிச்சப் புள்ளிகளும் பாயவேண்டும், தன்னை எவரும் அவ்வளவு எளிதில் தொட்டுவிடக் கூடாது, மலையின் உச்சியில் நின்றாலும் கூட நிறைவு பெறாமல் இன்னும் அண்ணாந்து பார்க்கும் வேட்கை கொண்ட,  தான்தான் எல்லாவற்றையும் விட மேன்மையானவன் என்கிற அகச்சிக்கலுக்குள் இருக்கும் ஒரு மருத்துவ மாணவரோடு, எதிர்நிலையில் நின்று மரவுச்சிக்குக்கூட அந்த நேரத்தில் நிறைவு கொள்ளக்கூடிய  அடிப்படை புரிதலோடு இயல்புவாத வாழ்க்கையை ஓர் நேர்க்கோட்டில் வாழ நினைக்கும் மற்றொரு மருத்துவ மாணவர் – இவ்விருவர்களின் வாழ்வியல் அணுகுமுறையை, வாழ்வின் மீதான, உறவுகளின் மீதான நம்பிக்கைகளையும், அவ நம்பிக்கைகளையும், அவர்கள் சார்ந்த பணியிடச் சூழல்களையும், நட்பு என்கிற கேடயத்திற்குள் நிகழும் களேபரங்களை வாசகர்களுக்கு பிசிறில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் மயிலன்.

ஒருத்தரை நிலைக் கொள்ளச் செய்வதும், வீழ்த்துவதும் அந்தந்த இடங்களின் சூழலும், சந்தர்ப்பமும் தான். கடிவாளம் போட்டுக்கொண்டு ஓடும் மனிதர்கள் ஒருக்கட்டத்தில் யாரோ ஒருவர் விரித்த கண்ணியில் சிக்குண்டு சிதைந்து போதலும், இத்தனை நாள் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் சிறு பொழுதில் நிர்மூலமாவது தெரிந்தும் செய்வதறியாமல் கையறு நிலையில் இருப்பதற்கான காரணம் புரிகையில் வேறொரு முடிவைத் தேடிக் கொள்கிறார்கள். தன்னுடைய மகுடத்தின் ஒவ்வொரு கல்லாக உருவி, தன்னை வீழ்த்துவதை யார்தான் அதை விரும்பி ரசித்துக் கொண்டிருப்பார்கள். அதிகாரத்தினால் வரையப்பட்ட ஒழுங்கற்ற வட்டத்தினை சீர் செய்யக் கூட விரும்பாத, ஏன் அப்படியொரு வட்டமிருப்பதைக் கூட கவனிக்காத ஒருத்தனை வெகு இயல்பாக சிதைத்து விட்டன சுற்றி இருந்த சூழ்ச்சிகள். அப்படியொரு அபாயகரமான இடத்தைத் தாண்டி வெளிவந்து தான் விரும்பிய மருத்துவச் சேவையை வழங்கிக் கொண்டிருப்போருக்கு நன்றி செலுத்துகிறேன்.

மனிதனுக்கு அடிப்படையில் ஒரு வேட்டை குணமுண்டு என்று எங்கையோ படித்த நினைவு, துறைத்தலைவர் மயில்சாமி, மருத்துவ நண்பரான சாதாசிவம், தாமோதரன், செவிலிகளான நாஸியா, லீமா, ஊழியர் மணி இவர்கள் எல்லோரும் வஞ்சம் தீர்த்தல் என்கிற புள்ளியில் இணைகிறார்கள். பிராபகரனின் வேட்டையில் வெளிப்படையாகவோ, உள்ளுக்குள்ளோ மகிழ்ந்து திளைக்கிறார்கள். எந்த முன்னேறிய சமூகத்திற்கும் இந்த நோயிலிருந்து விடுதலை கிடையாது என்றே நினைக்கிறேன்.

நாவலின் துவக்கமான பீடிகையும், பக்கங்கள்  192-200 வரை மயில்சாமியை தோலுரித்தளையும், பக்கங்கள் 201-208 வரை பெயரிப்படாத “நான்” என்கிற பாத்திரத்தின் தராசு நிறுவையையும், ஒவ்வொரு கதாப்பாத்திரம் பேசுவதை அதை அப்படியே நம்பிடாமல் அதனை பகுப்பாய்ந்து தேவையானவற்றைக் கொண்டு சித்திரம் வரைந்ததை உச்சமென கருதுகிறேன்.

திரும்ப, திரும்ப ஒரே தற்கொலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே என்கிற அயர்ச்சி ஏற்படுகையில், இதில் ஏன் தான் பிராபகர் தன்னை மரணித்துக் கொண்டார் என்கிற தேடுதல் சுவாரசியத்தை கொடுத்து வாசகனை இழுத்துச் செல்கிறது.  ஸ்மார்ட் போன் மீது பற்றிய தனது அதிருப்தியை அங்காங்கே பதிவு செய்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது, அதற்கேற்றார் போல் தானே சீரழிவுகளை கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மருத்துவத்துறைச் சார்ந்து, அதன் தேர்வுமுறைகளைப் பற்றியும், அங்குள்ள உள்ளரசியல், மூத்த அதிகாரிகளின் அதிகாரத்திமிர் பற்றியும், மாணவர்களின் குண நலன்கள் பற்றியும், தேர்ச்சி பெற்றவர்கள் பற்றியும், விரும்பியத் துறை கிடைக்காத மாணவர்களின் மனச் சிதைவுகள் பற்றியும் இவ்வளவு துல்லியமாக இதுவரை தமிழில் இப்படியொரு நூல் வந்திருக்காது அதற்காகவே மயிலனுக்கு ஆரத் தழுவலும், வணக்கங்களும்.

நாவலின் ஓரிடத்தில் உதவிப் பேராசியர் ஒருவர் மணி என்கிற கடைநிலை ஊழியர் நன்கு வேலை செய்பவதாகவும், மணி இருந்துவிட்டால் போதும் எனக்கு அறுவை சிகிச்சைக்கு உட்படும் நோயாளியை தயார் செய்து கொடுத்துவிடுவார், அதற்காக பெண் நோயாளிகளுக்கு மொட்டை அடிக்கையில் அந்த முடியினை எடுத்துக் கொண்டு போய் சவுரி முடிக்கடையில் மணி விற்பதை நான் கண்டு கொள்வதில்லை என்று சற்று பெருமையாக கூறுகையில்,விற்காமல் அந்த மயிரை வைத்துக் கொண்டு மணி, என்னச் செய்யக் கூடும் என்று எனக்கு குழப்பமாக இருந்தது என்று முடித்திருப்பார், அது தான் மயிலன் அண்ணாச்சி ... அந்த இழையோடும் நகைச்சுவையோடு விரைவில் இன்னொரு தொகுப்பை எதிர் நோக்குகிறேன் ...     

பேரன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு
அரியலூர் மாவட்டம் 

https://uyirmmaibooks.com/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f/

Post Comment

ஆகஸ்ட் 10, 2017

அரியலூரில் விதைத் திருவிழா ....



உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்படும் சிறு (கூடை) புட்டி. குமரிகளை சிங்காரிப்பது போன்று சாணம் போட்டு வழித்து மொழுகி வைத்திருப்பர். அன்று எல்லோர் வீட்டிலும் இருந்த கூடை, இன்று சிலர் வீட்டில் மட்டும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது. எனது பாட்டனும், அவனுக்கு முந்திய சந்ததிகளும் விதைகளுக்காக கையேந்தி நின்றதில்லை. தங்களுக்கான விதைகளை தாங்களே சேமித்து வாழ்ந்த சாமர்த்தியசாலிகள். அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை ஒருபோதும் தங்களை அழித்துக்கொள்ள அவர்கள் விரும்பியதில்லை என்பதை தற்போதைய விவசாய சூழல் தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்தி வருகிறது.



இந்த நிலையில் தன்னெழுச்சியாக விவசாய நலன் சார்ந்த மக்களும், அதன்பால் வேட்கை கொண்ட இளைஞர்களும் கிளம்பியிருப்பது சற்று நிம்மதியைத் தருகிறது. இயற்கை விவசாயத்தின் மீதும், நாட்டு விதைகளின் அவசியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர்வது மீண்டும் பழைய சூழலுக்கு திரும்புவதற்கான முதற்படியாகத் தான் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக இளையோர்களின் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. 

இதன் நீட்சியாக வருகிற சனிக்கிழமை (12.08.2017) அன்று அரியலூர் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில், ஒரு நாள் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் நிகழ இருக்கிறது. நாட்டு விதைகள் அதன் தேவை, அவசியம், மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கமும் நடைபெறுகிறது. துறை சார்ந்த வல்லுனர்களும், ஆர்வலர்களும் பேச இருக்கிறார்கள். கூடவே அரியலூர், பெரம்பலூர், மற்றும் கடலூர் மாவட்ட இயற்கை வழி வேளாண்மை குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர். நாம் தான் நமக்கான வாழ்வியலை கட்டமைத்து கொள்ள வேண்டும். முடிந்தவரை குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள், ஒரு திருவிழாவிற்கு சென்று வந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். 



இப்படியொரு சிறப்பான நிகழ்வு மேலும் பலரை சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்திற்காக எங்களது கிராமத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் சுவரொட்டிகளின் வாயிலாக பரப்பி வருகின்றனர் எங்கள் ஊரின் தமிழ்க்களம் நண்பர்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துச் சொல்லி விதைத் திருவிழாவினை பெருவிழா ஆக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

இந்நிகழ்வினை ஒருங்கிணைக்கும் 'தமிழ்க்காடு' இயற்கை வேளாண்மை இயக்கத்திற்கும், அதன் நண்பர்களுக்கும் எங்களது அன்பும், நன்றிகளும்.

அழைப்பின் மகிழ்வில்,  

தமிழ்க்களம் நண்பர்கள், 
உகந்த நாயகன் குடிக்காடு.     


Post Comment

ஜூலை 25, 2017

நினைவின் ருசி

ஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் போட்டு ரசம் வைத்துவிடுவர். ரசத்திற்கும் வாய்ப்பில்லை என்றால் இருக்கவே இருக்கும் உறியில் தொங்கும் தயிர். கூட்டு, பொரியல் என்பதெல்லாம் அறுவடை நேரத்திலோ, இல்லை அமாவாசை நாட்களிலோ தான் கண்ணில் காண முடியும். இட்லியும், அரிசி சோறும் கிடைக்கும் அமாவாசை நாட்களுக்கு ஆவலாக காத்திருந்த நாட்களுமுண்டு. மாவரைக்கும் குடை கல் சத்தத்தை விட, கம்பும், சோளமும் உடைபடும் உலக்கைச் சத்தமே மேலோங்கி கேட்கும் ஒவ்வொரு வீட்டிலும். பத்து காணி, பதினைந்து காணி வைத்திருக்கும் பெருந்தனத்து குடும்பங்களின் அடுப்பங்கரையில் கூட கம்பும், சோளமும் தான் வெந்து கொண்டிருக்கும்.

விடியுமுன் கிளம்பும் கணவனோடு, சோற்றுச் சட்டிகளை சுமந்துகொண்டு காடுகளுக்கு சென்றால், வீடு திரும்ப இரவு ஆகிவிடும். வீட்டிற்கு வந்து கம்பு/கேப்பை/சோளம் இவற்றில் ஒன்றில் களி கிண்டி, முருங்கைக் கீரை குழம்பு வைத்து ஆவி பறக்க தட்டில் வழித்து வைக்கையில் மணி பத்தினைக் கடந்திருக்கும். பசி களைப்பில் உறங்கிப் போன பிள்ளைகளை எழுப்பி அவர்களையும் சாப்பிட வைத்துவிட்டு, தானும் நான்கு வாய் அள்ளிப் போடுகையில் எப்படா படுக்கையில் வீழ்வோமென்று தூக்கம் சொக்கும். மாடுகளுக்கு தவிடு புண்ணாக்கு ஊறவைத்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்ந்தால், மெல்ல காலை சுரண்டும் புருசனுக்கும் ஈடு கொடுத்துவிட்டு உறங்கிப் போவாள். சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் அந்த உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது. இதுதான் அன்றைய சம்சாரிகளின் வாழ்வியல் முறை. சலிப்பின்றி உழைத்த கட்டைகள்.
இப்போது அப்படியொரு கடின உழைப்பு இல்லையென்றாலும், உழைக்கும் மக்கள் இல்லாமல் இல்லை. உழைத்து மேம்பட்ட வாழ்வு நிலைக்கு வந்துவிடவில்லை, வாழ்வியல் சூழல் தான் மாறியுள்ளது. உழைப்புக்கான தேவை இருந்தும் அதை ஒரு பொருட்டாக கருதுவது கிடையாது. முன்பெல்லாம் கடையில் சென்று அரிசி வாங்குவதை பெரும் இழுக்காக கருதிய காலம் மறைந்து, சந்தைகளில் பொருள் வாங்குவதை கௌரவமாக கருத துவங்கிவிட்டனர் மக்கள். அதனால் தான் நம்மிடமே மூலப்பொருளை வாங்கி, அதை இரண்டு மடங்கு வைத்து அதை நம்மிடமே சந்தைப்படுத்துகின்றன வியாபார மூளைகள், அதையும் சுரணையே இல்லாமல் வாங்கிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, தங்கள் மரங்களில் விளையும் புளியம்பழங்களை பொறுக்கி அதை காயவைத்து, ஓடுடைத்து, பழைய கல் தொட்டிலில் போட்டு உலக்கையால் குத்தி, கொட்டைப் பிரித்து, உருட்டி அடுக்கில் போட்டு வைத்தால் அடுத்த விளைச்சல் வரை கடை பக்கம் தலை வைக்கவேண்டிய அவசியம் வராது. பிரித்து எடுக்கப்பட்ட புளியம் விதைகளை வறுத்து, கூடு நீக்கி, மஞ்சளும், உப்பும், கலந்து இரவில் ஊர வைத்து, விடிந்த பின்பு நீரை வடிக்கட்டி விட்டால் ஊறிய புளியம் விதைகள் தான் அன்றைய தினத்துக்கான பெரும் சுவை கொண்ட நொறுக்குத் தீனி. இப்போதெல்லாம் அதற்கான சாத்தியங்கள் குறைவே. உரலுக்கும், குடைக்கல்லுக்கும் டாட்டா காட்டிவிட்டு, அந்த இடத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதில் யாரையும் குறிப்பிட்டு விரல் நீட்டி குற்றம் சொல்லிவிட முடியாது.
எதையோ எழுத நினைத்து, வேறு எங்கையோ வந்து நிற்கிறேன். நேற்று இரவு முருங்கைக் கீரை குழம்பு செய்தேன். அம்மாவிடம் அலைபேசியில் கேட்டு முதல் தடவையாக செய்தேன், சுவை எனக்கு பிரமாதமாகத் தான் இருந்தது. சாதத்தில் சுட சுட முருங்கைக்கீரை ஊற்றி பிசைகையில் சட்டென்று, அகப்பையில் வழித்துப் போட்ட கம்பங்களியின் நடுவில் குழி தோண்டி அதனுள் முருங்கைக்கீரை குழம்பை ஊற்றி மணத்தோடு பிசைந்து தின்ற அந்த நொடி நினைவில் வந்து போனது. நாகரீகம் என்று விரட்டிய எல்லாமும் இன்று ஆரோக்கியம் என்கிற பெயரில் பலமடங்கு விலையில் நம்மிடமே வந்து சேர்வதை நினைக்கையில் நம்மைப் போன்ற சிறந்த அடிமைவாதிகள் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
பேரன்புடன்

அரசன்

உகந்த நாயகன் குடிக்காடு.   

Post Comment

ஜூலை 18, 2017

மாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .



கடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவில் நானும் ஒரு விருந்தினனாய் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அரியலூர் மாவட்டத்திற்கே இந்த முயற்சினை முன்னுதாரணமாக கூறலாம். படிப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பெயரெடுத்த எங்களது மண்ணினை மாற்ற முனைந்திருக்கும் இளையோருக்கு அன்பு கலந்த நன்றியும், பாராட்டுக்களும்.



முதல் விதையாக தங்களது சொந்தக்கிராமமான செட்டித்திருக்கோணம் அரசுப் பள்ளியை தேர்வு செய்து இணைய வசதியோடு கூடிய கணினி அறையும், சிறிய நூலகம் ஒன்றையும் அமைத்து தந்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் நண்பர்களின் பொருளாதார பங்களிப்போடு, உள்ளூரில் இருக்கும் சில நண்பர்களின் உழைப்பில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். யாருக்கோ?, யாரோ செய்யும் உதவி என்பது போல், இன்றைய தலைமுறையினர் சிலர் அலட்சியப்படுத்தி கடந்தாலும், அவர்களும் உணர்ந்து வருங்கலாத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.



சமூக மாற்றம் வேண்டுமெனில் அது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதை மிகச் சரியாக உணர்ந்து, அந்த இடத்தில் விதையினை பதியமிட்டிருக்கிரார்கள், அதற்கான பலனை கண் கூடாக காணலாம் என்று சர்வ நிச்சயமாக நம்புகிறேன். தங்களது கிராமத்திற்கு என கூகுள் செயலி, இணையப் பக்கம் என்று எந்தவொரு பிரதிபலனும் பாராமல் பலரின் உழைப்பின் வாயிலாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம் விரைவில் அரியலூரின் மற்ற கிராமங்களுக்கும் பரவும் என்றே நம்புகிறேன்.

இத்தோடு நின்றுவிடாமல் தங்களது அடுத்தக் கட்ட முயற்சியினை அவர்கள் விவரிக்கையில், அவர்களின் தோள் சுமையை நாமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கிளம்பியிருக்கிறது. ஆக்கப் பூர்வமற்ற வெட்டிப் பேச்சுகளோடு, எதிர்கால சந்ததிகளின் மீது பெரிய அக்கறை இல்லாமல், வெறுமனே பொழுதைக்  கழித்துக் கொண்டிருக்கும் எங்களது சுண்ணாம்பு கிராமங்களின் முகம் மாற தொடங்கியிருக்கிறது என்பதே சற்று நம்பிக்கையை தந்திருக்கிறது.   



எவன் எவனோ, எங்கிருந்தெல்லாமோ வந்து, என் பாட்டனையும், அப்பனையும் ஆசை வார்த்தைக்காட்டி எங்களது வாழ்வாதரமான விவசாயப்பூமியை குறைந்த விலைக்கு வாங்கி, மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளத்தை சுரண்டி... சுரண்டி... இன்றளவும் தின்று கொழுத்துக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எங்களிடம் போதிய படிப்பறிவும், தெளிவான அரசியல் பார்வையும் இல்லாமல் போனது தான். இன்றளவும் தனியார் ஆலைகள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க ஆளில்லாமல், துணிவில்லாமல், அவர்கள் இடும் ஏவலுக்கு காத்து நிற்கும் கூலிகளாகவே இருக்கின்றோம். வளரும் தலைமுறைகளுக்கு, விழிப்புணர்வு தந்து, வாசிப்பை நோக்கி ஈர்க்க முன்னெடுப்புகள் செய்யாமல் வெறும் விளம்பரப் பிரியர்களாகவே இருக்கின்றனர் எங்களது மாவட்டத்தின் பேரமைப்பு நண்பர்கள். 

ஒரு சமூகம் மேம்பட்ட சமூகமாக இருக்கவேண்டுமெனில், பள்ளிக் கல்வியோடு சேர்ந்த பொது வாசிப்பும் அவசியம் தேவை. அதற்கான முன்னுதாரணமாக செட்டிதிருக்கோணம் நண்பர்களின் முயற்சினை பார்க்கிறேன், பெரிதும் பாராட்டுகிறேன்.   
உங்களது ஒவ்வொரு செயலையும் நுணுக்கமான திட்டமிடுதலோடு செய்யுங்கள் நண்பர்களே, நானும் சில பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், சில நெருடல்களும், உரசல்களும் இருக்கத்தான் செய்யும், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்து வெளிவாருங்கள் உங்களை ஊரே கொண்டாடும்...

பேரன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு.   


Post Comment